search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் பயங்கரவாதி"

    காஷ்மீரில் ஹிட்-லிஸ்ட் பட்டியலில் 21 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை நேற்று பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர். #JammuandKashmir

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீர் மாநிலத்தில் அட்டகாசம் செய்து வரும் பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட மத்திய அரசு அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது.

    இந்த திட்டத்தை அமல் படுத்த முதல்-மந்திரியாக இருந்த மெகபூபாவும் சில கட்சி தலைவர்களும் தடையாக இருந்தனர். தற்போது காஷ்மீரில் கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ளதால் பாதுகாப்பு படையினரின் திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    காஷ்மீரில் வருகிற 28-ந் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில்
    ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் அந்த யாத்திரையை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு தெரிய வந்தது. அனந்த்நாக் மாவட்டத்தில் அந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு சென்று அவர்களை வேட்டையாடினார்கள்.

    அதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காஷ்மீர் மாநில தலைவனாக இருந்த தாவூத் அகமது சலாபி மற்றும் அவனது 3 கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது காஷ்மீரில் பதுங்கியுள்ள மற்ற பயங்கரவாதிகளிடம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட வேண்டிய 21 முக்கிய பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை நேற்று பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர். அந்த 21 பேரில் 11 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆவார்கள். 7 பேர் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஆவார்கள்.

    2 பேர் ஜெய்ஷ்-இ- முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பையும் ஒருவன் அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் எனும் பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பயங்கரவாதிகள் மிக, மிக தேடப்படும் பயங்கரவாதி பட்டியலில் உள்ளனர். இந்த 21 பயங்கரவாதிகளும் உடனடியாக அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பாதுகாப்பு படை உயர் அதிகாரி கூறியுள்ளார்.

    அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘‘ஹிட்-லிஸ்ட் பட்டியலில் உள்ள 21 பயங்கரவாதிகளையும் அழித்து விட்டாலே போதும், காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்பி விடும். அதோடு அந்த அமைப்புகளின் செயல்பாடுகளையும் முடக்க முடியும்’’ என்றார்.

    அழிக்கப்பட வேண்டிய 21 பயங்கரவாதிகளில் தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அல்தாப் அகமது தர், கோபியன் பகுதியைச் சேர்ந்த ஜீனத்-உல்-இஸ்லாம், பாகிஸ்தானில் இருந்து வந்து பாரமுல்லா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் அபு ஆகிய 3 பயங்கரவாதிகளும் மிக, மிக முக்கியமானவர்களாக கருதப்படுகிறது. வெடிகுண்டுகள் தயாரித்து வழங்க பயிற்சி பெற்ற இவர்கள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டி வருகிறார்கள்.

    சுட்டுக் கொல்லப்பட இருக்கும் இந்த 21 பயங்கரவாதிகளில் 3 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்களது தலைக்கு ரூ.12 லட்சம் பரிசு தரப்போவதாக பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

    21 பயங்கரவாதிகளை வேட்டையாடவே கமாண்டோ படையினர் காஷ்மீரில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #JammuandKashmir

    ×